கோவை: விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் விளங்குகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடும் நெருக்கடியை சந்தித்தது.
மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணங்களால் நுகர்வு குறைந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பருத்தி சார்ந்த ஜவுளிப்பொருட்கள் 1.5% சதவீதம், ஆயத்த ஆடைகள் துறை 10 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: இந்திய ஏற்றுமதி தொடர்பாக தனியார் நிதி நிறுவனம் நடத்திய ஆய்வு குறிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 9 ஆண்டுகளில், இந்திய பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 44 சதவீதம் வளர்ந்து இருப்பதாகவும், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், பொறியியல், ரசாயனம் உள்ளிட்ட துறைகள் இந்திய சராசரி ஏற்றுமதியைவிட அதிகம் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் பருத்தி சார்ந்த ஜவுளிப்பொருட்கள் 1.5 சதவீதம், ஆயத்த ஆடைத்துறை 10 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்டவை வாய்ப்பை பயன்படுத்தி மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
உதாரணமாக அமெரிக்க சந்தையில், 2019-ம் ஆண்டு 30 சதவீதமாக இருந்த சீனாவின் பங்கு, தற்போது 22 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் வியட்நாம் 16 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதம், வங்கதேசம் 7.0 சதவீதத்தில் இருந்து 9.7 சதவீதம், கம்போடியா 3.2 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பங்கு 0.9 சதவீதம் மட்டுமே உயர்ந்து 5.8 சதவீதமாக உள்ளது. நாம் மேற்கொள்ளும் புது முதலீடுகள் அனைத்தும் உள்நாட்டு உற்பத்தியை நோக்கியே பயன்படுத்தப்படுகின்றன. ஏற்றுமதியை அதிகரிக்க நம்முடைய ஒட்டுமொத்த போட்டித் திறனை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட ஆடை வகைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் பல்வேறு வகை ஆடைகளை தயாரிப்பது, புது முதலீடுகளை நவீன ஒருங்கிணைந்த உற்பத்திக் கட்டமைப்புகளில் மேற்கொள்வது, உற்பத்தித் திறனை உயர்த்துவது, பெரிய ஆர்டர்கள் கையாளக்கூடிய வகையிலான கட்டமைப் புகளை அமைப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால், அடுத்து வரும் ஆண்டுகளில் இரட்டை இலக்க வருடாந்திர ஏற்றுமதி வளர்ச்சியை பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.