சிட் பண்ட் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரி விகிதம் விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒருங்கமைக்கப்பட்ட சிட் பண்ட் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய சிட் பண்ட் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அனைத்து இந்திய சிட் பண்ட் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.எஸ்.சிவ ராமகிருஷ்ணன் கூறியதாவது: சிட் பண்ட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி விகித பிரச்சினையை கருத்தில் எடுத்துக் கொள்ளவிட்டால் இந்த நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். இந்த சிட் பண்ட் நிறுவனங்கள் நிதிச்சார் சேர்ப்பு (Financial Inclusion) கொள்கைக்கு சாதகமாக செயல்பட்டு வருவதும் தடைபடும்.
குறைந்த மற்றும் நடுத்தரமான வருமானம் வரக்கூடிய மக்களின் தேவைகளை சிட் பண்ட் நிறுவனங் கள் பூர்த்தி செய்து வருகிறது. இதற்கு சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பாதுகாப்புத் தேவை. தற்போது நாட்டில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) வரிச் சுமை இல்லை. அதேபோன்ற சலுகையை சிட் பண்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
முறையாக இயங்காத நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடும் பொழுது சிட் பண்ட் நிறுவனங்கள் என்று தவறாக மேற்கோள் காட்டப்படுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் சிட் பண்ட் நிறுவனங்கள் மீது உள்ள நம்பிக்கை குறைகிறது. தவறாக இயங்கும் நிதி நிறுவனங்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டி.எஸ்.சிவ ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அனைத்து இந்திய சிட் பண்ட் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்து வரும் தமிழ்நாடு ஒருங்கமைக்கப்பட்ட சிட் பண்ட் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறவடைந்தன. இதை கொண்டாடும் வகை யில் வரும் டிசம்பர் 18-ம் தேதி திருச்சியில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கமைக்கப்பட்ட சிட் பண்ட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.