உலகில் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடுகள் சில உண்டு. இந்தியா அவற்றில் ஒன்று.
2019 பெருந்தொற்று ஏற்படுத்திய கடுமையான பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியா விரைவாக மீளவும், தொடர்ந்து வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் துணைபுரிந்தவை. வேளாண்மை, மீன்வளம், கணினிசார் சேவைத்துறை.
உணவுப் பொருள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்று இருக்கிறோம். உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்து ஏற்றுமதிக்கும் வாய்ப்பு கொண்டதாக மீன் உற்பத்தியில் சாதித்து வருகிறோம். கணினிசார் சேவைத் துறையில், சிற்சில சறுக்கல்கள் இருந்தபோதிலும், தொடர்ந்து நற்பெயரைத் தக்க வைத்துள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை, ஓரளவுக்குப் பரவலாக இயல்பு அளவை ஒட்டிப் பெய்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும் இது தொடர்ந்தது. இதுபோல் உலகின் பல பகுதிகளில், மழைப்பொழிவு கைகொடுத்துக் காப்பாற்றியது. இதனால் உலகப் பொருளாதாரம் மீண்டு எழ முடிந்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மழை பெய்யாமல் பொய்த்து, கடும் வறட்சி ஏற்பட்டு இருக்குமானால்..? மனித குலம் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். நல்லவேளை தப்பித்தோம்.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.39,44,908 கோடி. இதில் வேளாண் துறைக்கு ரூ.1.24 லட்சம் கோடி. இது அதிகமா, குறைவா என்கிற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல இயலாது. ஆனால், தரமான விதைகள், தேவையான நீர்ப்பாசன வசதி, மானிய மின்சாரம், மானிய உரம், பயிர்க் காப்பீடு, குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசுக் கொள்முதல் நிலையங்கள், தேசிய வேளாண் சந்தை என்று பல வழிகளில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், செயல்பாடுகள் சரியான திசையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது.
ஆண்டுதோறும், ரசாயன உரம் மானியமாக மட்டுமே ரூ.80,000 கோடி வரை மத்திய அரசு செலவிடுகிறது. இவ்வகை உரங்கள் ஏற்படுத்துவதாகச் சொல்லும் ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகளுக்கு அப்பால், இதன் மீது அரசு இத்தனை பெரிய தொகை செலவிடத்தான் வேண்டுமா..? சமீப காலமாய் மத்திய அரசு, இயற்கை உரங்கள் மீது கவனத்தைத் திருப்பி இருக்கிறது. மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம்.
இந்தத் திசையில் மேலும் அர்த்தமுள்ள வகையில், இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சி, விழிப்புணர்வு, முன்னெடுப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல் நல்லது. மிகுந்த கவனத்துடன் படிப்படியாய் இயற்கை விவசாயம் நோக்கி நகர்தல் இன்றியமையாதது. இலங்கையில் நடைமுறை செயல்பாடுகளால் ஏற்பட்ட தோல்விக்கு இயற்கை வேளாண்மை முறையைப் பொறுப்பாக்க முடியாது என்பதை இந்திய அரசு உணர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.
இந்தியாவில், வேளாண்மைக்கு உகந்த நிலம், 15.97 கோடி ஹெக்டேர் அளவுக்குப் பரந்துள்ளது.இதில் சுமார் 5 சதவீதத்துக்கு மேலான நிலம், இன்னமும் வேளாண்மைக்கு உட்படுத்தப்படாமல் தரிசாகவே கிடக்கிறது. இதனை விவசாய நிலங்களாக மாற்றலாம். ‘மாற்றுப் பயிர்’ விளைச்சலுக்குத் தயார் செய்யலாம். இது தொடர்பாக அரசு உடனடியாக வேளாண்துறை வல்லுநர்களைக் கொண்டு குழு அமைத்து, போர்க்கால அடிப்படையில் பணியாற்றினால், ஓரிரு ஆண்டுகளிலேயே சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலம், சாகுபடிக்கு உகந்ததாய் மாறும்.
விவசாயம் தொடர்பாக மத்திய அரசின் கவனம் தேவைப்படுகிற மற்றொரு முக்கிய முன்னெடுப்பு நீர்ப்பாசன வசதி. இது தொடர்பாகவும் தற்போதைய அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ‘ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழி குடிநீர்’ என்கிற சிறந்த திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதேபோல, ஒவ்வொரு விவசாய நிலத்துக்கும், உத்தரவாதமான நீர்ப்பாசன வசதி என்கிற திட்டத்தை வகுத்து செயல்பட்டால், இந்திய வேளாண் துறை, அடுத்த கட்டத்துக்கு நகரும். இவற்றில் எதுவும் இயலாதது அல்ல. சற்றே பார்வையைத் திருப்பினால் போதும். பாதை சரியாகி விடும்.
அடுத்து.. மீனவர், நெசவாளர். என்ன செய்யலாம்..?