வணிகம்

பணமற்ற பரிவர்த்தனை: 15 ஆயிரம் அதிர்ஷ்டசாலிகள்

பிடிஐ

பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதுவரை 8 கோடி பேர் இத்தகைய பணமற்ற பரிவர்த்தனையை நடத்தியுள்ளனர். அவர்களில் 15 ஆயிரம் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 21-ம் தேதி வரையான காலத்தில் பரிவர்த்தனை மேற்கொண்டவர்களில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

`லக்கி கிரஹக் யோஜனா’ எனும் திட்டம் நுகர்வோருக்கானதாகும். இதேபோல வர்த்தகர்களுக்கு `டிஜி தன் வியாபார் யோஜனா’ எனும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ் டிஜிட்டல் பரிமாற்றத்தில் வர்த்தகம் மேற் கொள்ளும் நுகர்வோரில் அதிர்ஷ்ட சாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1,000 பரிசு அளிக்கப்படும். இத்தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும்.

இதேபோல வர்த்தகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வாரந்தோறும் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 14 வரையில் அமலில் இருக்கும். இதற்கென ரூ. 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை, ரூபே, ஆதார் அடிப்படையிலான ஏஇபிஎஸ் முறை, யுஎஸ்எஸ்டி உள்ளிட்ட வற்றின் மூலமாக பரிவர்த்தனை செய்யும் நுகர்வோர், இதை ஏற்கும் வியாபாரிகள் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ரூ. 50 முதல் ரூ. 3,000 வரை பரிவர்த்தனை செய்வோர் இப்பரிசுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

இ-வாலட், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை செய்வோர் இப்பரிசுக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.

பரிசு கிடைத்ததை அறிவது எப்படி?

உங்களுக்குப் பரிசு கிடைத்திருக்கிறதா என்பதை அதற்குரிய இணையதள முகவரிக்குச் சென்று தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: https://digidhanlucky.mygov.in/

நீங்கள் வாடிக்கையாளர் அல்லது வர்த்தக ராயிருந்தால் அதற்குரிய பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து நீங்கள் உங்கள் பரிவர்த்தனை மேற்கொண்ட அட்டை யில் எந்த செல்போன் எண்ணை அளித்துள் ளீர்களோ அதை பதிவிட வேண்டும்.

இதைத்தொடர்ந்து உங்களது செல் போனுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய சங்கேத எண் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக வரும். இதைத் தொடர்ந்து உங்களுக்கு பரிசு கிடைத்துள்ள விவரம் கிடைக்கும்.

தினசரி 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இந்த அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்கு தலா ரூ. 1,000 பரிசு வழங்கப்படும். இதைத் தவிர வாரந்தோறும் 7 ஆயிரம் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று பேருக்கு பரிசு களாக ரூ. 1 லட்சம், ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மெகா குலுக்கல் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறும் இதில் முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ.1 கோடி, ரூ.50 லட்சம் மற்றும் ரூ.25 லட்சம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. யுஎஸ்எஸ்டி பரிவர்த்தனை மேற்கொண்ட வாடிக்கையாளர்களில் 100 அதிர்ஷ்டசாலி, யுபிஐ மற்றும் ஏஇபிஎஸ் முறையிலான பரிவர்த்தனை மேற்கொண்டவர்களில் 1,500 பேரையும், ரூபே மூலமான பரிவர்த்தனை மேற்கொண்ட 11,900 பேரையும் தேர்வு செய்து பரிசு வழங்க திட்டமிட்டுள்ளது.

வர்த்தகர்களைப் பொறுத்த மட்டில் வாரத்துக்கு 7 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ. 2,500 என பரிசுகள் வழங் கப்பட உள்ளன. இப்பரிசுக்கு டிசம்பர் 25 முதல் ஏப்ரல் 14 வரையான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஏப்ரல் 14-ம் தேதி நடைபெற உள்ள மெகா குலுக்கலில் முதல் மூன்று பரிசாக முறையே ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT