திருப்பூர்: ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனம் சார்பில், வேட்டி வார விழா இன்று (ஜன.1) தொடங்குகிறது. இதையொட்டி, திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், ரூ.500-க்கு 3 வேட்டிகள் கொண்ட காம்போ பேக்கை நேற்று அறிமுகம் செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2015-ல் சகாயம் ஐஏஎஸ் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜன.6-ம் தேதி தமிழக அரசால் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. தொடக்கம் முதலே இதை ‘வேட்டி வாரம்’ என ஒரு வார கொண்டாட்டமாக ராம்ராஜ் காட்டன் கொண்டாடி வருகிறது.
இந்திய கலாச்சார உடையின் மகத்துவத்தை அனைவரும் உணரும் விதமாகவும், இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் நாட்டத்தை ஏற்படுத்தி, அவர்களது மனதில் ‘வேட்டி’ மீதான ஆர்வத்தை உண்டாக்கும் வகையிலும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு வேட்டி வாரத்தைமுன்னிட்டு, ஜன. 1-ம் தேதி (இன்று)தொடங்கி, வரும் 7-ம் தேதி வரை, 3 வேட்டிகள் கொண்ட காம்போ பேக் ரூ.500-க்கு விற்பனைக்கு வருகிறது. கிராமப்புற நெசவாளர் நலன்கருதி, பெருமளவில் வாடிக்கையாளரை சென்றடையும் நோக்கில், 3 வேட்டிகளின் காம்போ பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும், ராம்ராஜ் ஷோரூம்களிலும் விற்கப்படுகிறது.
புத்தாண்டு, தமிழர் திருநாளான தைப்பொங்கல் காலகட்டத்தில், ரூ.500-க்கு 3 வேட்டிகள் கொண்ட இந்த காம்போ பேக் நிச்சயம் அனைவருக்கும் பயன் தரும். பணமதிப்பு நீக்கம் செய்த காலத்தில் வேட்டி வாரத்தை முன் னிட்டு ரூ.100-க்கு வேட்டி விற்ற பெருமை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தையே சேரும். கொங்கு பகுதி நெசவாளர்கள் தொடர்ந்து வேட்டியை தயார் செய்து தந்ததன் விளைவாக, தற்போது 50 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களை மேம்படுத்த ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆதாரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.அருண் ஈஸ்வர், தலைமை செயல் அதிகாரிகள் கே.ஏ.செல்வக்குமார், ஏ.கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.