பண மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும் பாது என எஸ்பிஐ கணித்துள்ளது.
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் உயர் மதிப்பு நோட்டுகளின் பங்கு 85 சதவீதமாகும். இவற்றின் மதிப்பு ரூ. 14 லட்சம் கோடியாகும். இவற்றில் ரூ. 2.5 லட்சம் கோடி வங்கிகளுக்குத் திரும்பாது என பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுத்துறை கணித்துள்ளது.
2016 மார்ச் மாத கணிப்புப் படி மொத்தம் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகள் ரூ. 14.18 லட்சம் கோடியாகும். இத்தொகையானது வங்கிகளில் உள்ள ரொக்கக் கையிருப்பை தவிர்த்ததாகும்.
நவம்பர் 9-ம் தேதி கிடைத்த தகவலின்படி வங்கிகள் வசமுள்ள ரொக்க கையிருப்பு தவிர்த்து புழக்கத்தில் உள்ள தொகை ரூ. 15.44 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. அதாவது மார்ச் மாத நிலவரத்தைக் காட்டிலும் ரூ. 1.26 லட்சம் கோடி அதிகமாகும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 9 நாள் இடைவெளியில் வங்கிகளில் செலுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
நவம்பர் 10-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையான காலத்தில் வங்கிகளில் பரிவர்த்தனையான (டெபாசிட் மற்றும் மாற்றப்பட்ட தொகை) தொகை ரூ. 8.44 லட்சம் கோடியாகும் என்று எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.
இவை அனைத்தையும் பார்க்கும்போது வங்கிக்குத் திரும்பிய தொகை ரூ. 13 லட்சம் கோடியாக இருக்கும். மொத்தம் புழக்கத்தில் உள்ளதாக கருதப்பட்ட ரூ. 15.44 லட்சம் கோடியில் திரும்பாத தொகையாக ரூ. 2.5 லட்சம் கோடி இருக்கும் என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.