மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 335 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உயர்ந்து 60,419 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 102 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,025 ஆக இருந்தது.
வீழ்ச்சியுடன் தொடங்கிய வர்த்தகம் மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 649.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,176.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 166.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,960.40 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது, சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் பரவல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடனேயே வார இறுதிநாள் வர்த்தகத்தைத் தொடங்கின. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி நவம்பர் 10-ம் தேதிக்கு பின்னர் முதல் முறையாக 18,000க்கும் கீழ் சென்றது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன. கோடாக் மகேந்திரா, ஹெச்சிஎல், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, மாருதி சுசூகி பங்குகள் சரிவில் இருந்தன.