புதுடெல்லி: கடந்த 2016 நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரூபாய் நோட்டுப்புழக்கம் அதிகரித்தால் மீண்டும்பண மதிப்பிழப்பு செய்யப்படுமா என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்திரி பதில் அளிக்கையில், “மத்திய அரசு ரூபாய் நோட்டுப் புழக்கத்திலிருந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்து வருகிறது. ரூபாய் நோட்டுப் புழக்கம் அதிகரித்தாலும் மற்றொரு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டம் இல்லை. தவிர, ரூபாய் புழக்கத்தைக் குறைக்க 2016-ல் பண மதிப்பிழப்புக் கொண்டு வரவில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்கவே கொண்டு வரப்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “பணவீக்கம், ஜிடிபி வளர்ச்சி, சேதமடைந்த நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகளை புழக்கத்துக்கு கொண்டு வருதல், ரிசர்வ் வங்கியின் தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்தேரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. ஆண்டுக்கு எவ்வளவு எண்ணிக்கையில், எவ்வளவு மதிப்பில் ரூபாய் நோட்டு அச்சிட வேண்டும் என்பன குறித்து ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து வருகிறது” என்றார்.