வணிகம்

முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்படும்; வரித்துறை அதிகாரிகளின் அதிகாரம் ரத்தாகும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தகவல்

பிடிஐ

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய அரசு முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைக்கலாம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா குறிப்பிட்டார்.

அதேபோல வரித்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கிறது என்றும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்பதற்காக ரியல் எஸ்டேட் துறையில் சொத்துகளின் மதிப்பு குறைத்து காட்டப்படுகிறது. அதேபோல கணக்கில் காட்டப்படாத பணமும் ரியல் எஸ்டேட் துறையில்தான் முடக்கப்படுகிறது. இதை எளிமைப்படுத்த ஒரே வழி முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்பதுதான்.

தற்போது அனைத்து வரி சீர்திருத்தங்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நாம் அனைவரும் பின்னோக்கிச் சென்று வரிச் சீர்திருத்தங்கள் பற்றி ஆராய வேண்டியுள்ளது. வரிகளை எளிமையாக கொண்டுவருவது மற்றும் துல்லியமாக வரி விதிப்பது போன்றவற்றை பற்றியும், வரி அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தற்போது வரி ஏய்ப்பு என்பது அதிக அளவில் நடைபெறுகிறது. வரி அதிகாரிகளின் அதிகாரங்கள் அதிகமாக இருப்பதுதான் வரி ஏய்ப்புக்கு காரணம். அதனால் இந்த அதிகாரங்களை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

மேலும் ரியல் எஸ்டேட் துறையில் வரி ஏய்ப்பவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறப்பான நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.

முந்தைய காலத்தில் மிகப் பெரிய அளவிலான கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு எந்த ஒரு வளரும் நாடும் முயற்சி செய்ததில்லை. இதுதான் முதல் முறை. நமக்கு சுத்தம் செய்வதற்கு வேலை கிடைத்துள்ளது அதை முறையாக செய்ய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எடுத்துள்ள பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகத் தேவையான நடவடிக்கை.

இருப்பினும் இந்த நடவடிக்கை யால் இந்த நிதியாண்டில் கடைசி இரண்டு காலாண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சி குறையும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் தொய்விலிருந்து மீண்டு வளர்ச்சியடையும். மூன்றாவது காலாண்டில் கொஞ்சம் சரிவு ஏற்படலாம்.

அதேபோல் நான்காவது காலாண்டிலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிதியாண்டில் வளர்ச்சி அடை வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அர்விந்த் பனகாரியா குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT