அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளதால் இந்தியாவுக்கு குறைவான அளவிலேயே பாதிப்பு இருக்கும் என்று மத்திய அரசின் மூத்த பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அசோசேமின் நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அர்விந்த் சுப்ரமணியன் மேலும் கூறியதாவது: பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வால் மற்ற நாடுகளை விட குறைவான அளவு பாதிப்பே ஏற்படும். சர்வதேச சூழலுக்கு ஏற்ப இந்திய ரிசர்வ் வங்கி சரியான முடிவை எடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தது நமக்கு சாதகமானது. இதனால் குறைந்த அளவே பாதிப்பு இருக்கும்.
எளிதான ஜிஎஸ்டி தேவை
எளிதான ஜிஎஸ்டி வரி அமைப்பு ஏற்படுத்துவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். குறைந்த வரி விகிதம் மற்றும் அதிகமான வரி விகிதம் ஆகிய இரண்டையும் சமன்செய்யும் வகையில் ஜிஎஸ்டி வரி அமைப்பு இருக்க வேண்டும். எளிதான ஜிஎஸ்டி அமைப்புதான் தற்போது பிரதமர் மோடி அறிவித்துள்ள பணமதிப்பு நீக்கத் திட்டத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் ரியல் எஸ்டேட், நில வர்த்தகம் மற்றும் மின்சாரத்தை ஜிஎஸ்டி அமைப்புக்குள் கொண்டு வர வேண்டும். முத்திரை வரி தனியாக இருக்கிறது. இந்த வரியை மாநில அரசுகள் தொடரலாம். ஆனால் நிலத்தை விற்பது மற்றும் அசையா சொத்துகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். கறுப்புப் பணத்திற்கு எதிராக அனைத்து அமைப்புகளும் தங்களுக்குள்ளே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முக்கியமாக நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் ஜிஎஸ்டிக்குள் வர வேண்டும்.
குறுகிய கால பாதிப்பு
தற்போது அறிவித்துள்ள பண மதிப்பு நீக்கத்தால் குறுகிய காலத்துக்கு பாதிப்பு இருக்கும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதுதான் இந்திய பொருளாதாரத்துக்கு சவாலாக இருக்கும்.
பேரியல் பொருளாதாரம் ரீதியாக இந்திய பொருளாதாரம் மிக நிலையாக இருந்து வருகிறது. நுகர்வோர் விலை குறியீடு மற்றும் மொத்தவிலைக் குறியீடு ஆகிய இரண்டும் குறைவாக இருந்து வருகிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்து வருகிறது. 2016-ம் ஆண்டு மிகப் பெரிய சாதனைகளை புரிந்துள்ளோம். ஆதார், ஜன் தன் யோஜனா, மொபைல் எண்கள் ஆகியவை மிகப் பெரிய அளவுக்கு சென்று சேர்ந்துள்ளன. இவை மிகப் பெரிய பலன்களை தரும். சீனா உற்பத்தியில் 25 வருடங்களில் செய்ததை ஏன் சேவைத்துறையில் நம்மால் செய்ய முடியாது?.
எண்ணெய் விலை உயர்வது குறைவது பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டாம். எண்ணெய் விலை அதிகரிக்கும் போது உற்பத்தியாளர்கள் வேகமாக தனது உற்பத்தியை அதிகரிப்பார்கள். அதனால் எண்ணெய் விலை உயர்ந்தால் அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என்று நான் நினைக்க வில்லை என்றார் அர்விந்த் சுப்ரமணியன்.