ரிசர்வ் வங்கி கணித்ததைவிட பொருளாதார சரிவு அதிகமாக இருக்கும் என்று நொமுரா ஆய்வு கூறியுள்ளது. பணப்புழக்க பற்றாக்குறை இந்திய பொருளா தார வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம் ரிசர்வ் வங்கி கணித்ததை விட அதிகமாக இருக்கும். அடுத்த ஆண்டு மார்ச் வரையிலும் பணப் புழக்க பற்றாக்குறை சிக்கல் நீடிக்கும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ஜப்பானிய பொருளாதார ஆய்வு நிறுவன மான நொமுரா ஆய்வு நடத்தி யுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கை படி, பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள் எதிர்பார்த் ததைவிட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்தால் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. குறுகில கால வளர்ச்சியில் இது மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனினும் பணப்புழக்க பற்றாக்குறை 2017ம் ஆண்டின் முதல் காலாண்டு வரையிலும் நீடிக்கும் என்று நொமுரா கூறியுள்ளது.
பண மதிப்பு நீக்கத்தின் காரணமாக நவம்பர் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 0.20-0.30 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி 0.10-0.15 சதவீதம் வரை சரியும் என்று கணித்திருந்தது. முக்கிய பல துறைகளின் பணவீக்கமும் 0.20 சதவீதம் வரை சரிவைக் கண்டிருந்தது.
ரிசர்வ் வங்கி, பிப்ரவரி மாதத்தில் ரெபோ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் வரை குறைத்து 6 சதவீதமாக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நொமுரா குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் அடுத்த நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் பிப்ரவரி 8-ம் தேதி நடக்க உள்ளது. கடந்த 7-ம் தேதி வெளியான நிதிக்கொள்கையில் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை.