புதுடெல்லி: கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு பணவீக்கம் 5.8% ஆக குறைந்துள்ள நிலையில், அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய புள்ளிவிவர அமைச்சகம் அறிக்கை: கடந்த நவம்பர் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் நிலை குறித்து மத்திய புள்ளிவிவர அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கான மொத்த விலை பணவீக்கம் 5.85% ஆக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் 8.39 ஆக இருந்த நிலையில், நவம்பர் மாதம் 2.54% சரிந்து 5.85% ஆக உள்ளது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத சரிவு என அரசு தெரிவித்தது.
மேலும், மொத்த பணவீக்க விகிதம் கடந்த செப்டம்பர் வரை இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், அது தற்போது தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல், சில்லறை பணவீக்க விகிதமும் கடந்த நவம்பரில் 5.88% ஆக சரிந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 6.77% ஆக இருந்தது. சில்லறை பணவீக்கத்தைப் பொறுத்தவரை 5.88% என்பது கடந்த 11 மாதத்தில் இல்லாத அளவு குறைவு என புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்திருந்தது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: மக்களவையில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுமக்களின் நன்மை கருதி பணவீக்க விகிதத்தை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசு உண்ணிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், குறைந்த பணவீக்க அளவுகளுடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதால், தேக்கநிலை குறித்த அச்சம் தேவையில்லை என தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆக இருக்கும் என்றும், இதை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசின் செயல்பாடுகள் உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நடப்பு நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.3.25 லட்சம் கோடியை அரசு செலவிடுவதற்கான அனுமதி கோரும் துணை அறிக்கைக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.