கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதார மந்தநிலை காரணமாக பெரும்பான்மையான மக்கள் புது வீடு வாங்கும் திட்டத்தை ஒத்திவைத்தனர். இந்த நிலை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரவி உள்ளதாக தெரிவிக்கின்றனர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்.
இப்போது ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாக சொல்லப்படுகிறது. மெள்ள, மெள்ள இந்தியாவில் இயல்புநிலை திரும்பி, அனைவரும் வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கிவிட்டோம். அதேபோல் பலரும் வீடுகள் வாங்க தொடங்கி உள்ள சூழல் இது என்கின்றனர் இந்த துறையை நம்பியிருப்பவர்கள்.
பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, தங்களுடைய சேமிப்பு நிலையானதாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு முதல் தேர்வாக இருப்பது வீடு வாங்குவது தான். சொந்தவீடு இருந்தால் பெருந்தொற்று உள்பட சவாலான காலகட்டத்தை சமாளித்து விடலாம் என்ற எண்ணமும் மக்களிடத்தில் தோன்றியிருக்கிறது. இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களை பொறுத்தவரை, ரெடிமேட் வீடுகளை பொதுமக்கள் அவர்களின் பட்ஜெட் மற்றும் மன ஓட்டத்துக்கு ஏற்ப வாங்குகின்றனர்.
டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரூ, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை, திருப்பூர் போன்று தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் வீடு வாங்குவதை மக்கள் சிறந்த முதலீடாக கருதுகிறார்கள். சுற்றுவட்டார பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் தெருக்கள் விசாலமாக இருந்தால், வாகனங்கள் நிறுத்துவது, போக்குவரத்துக்கு பிரச்சினை இருக்காது என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பலவும் உள்ள பகுதிகளில் வீடு விற்பனை எளிதாக நடப்பதாக சொல்கின்றனர். அதேபோல் திருப்பூர் போன்று தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில், தங்கள் வாழ்நாள் சேமிப்பாக வீடுகளை கருதுகின்றனர். வீடுகள் வாங்குவது என்பது அவர்களது வாழ்நாள் கனவாகும்.
கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை மக்கள் வாங்கினால் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கிறது. கரோனா காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக கட்டுமானத் துறையில் மணல், ஜல்லி, இரும்பு போன்றவற்றின் விலை உயர்வு, வேலையாட்களின் கூலி உயர்வு போன்றவை இனி புதிதாக கட்டும் வீடுகளின் விலையில் எதிரொலிக்கவே செய்யும் என்கின்றனர் புதியதாக வீடு வாங்க நினைப்பவர்கள்.
வீடு வாங்கும் இடம், உரிய நகர ஊரமைப்பு இயக்ககத்தால் (DTCP) அங்கீகரிக்கப்பட்ட இடமாக இருந்தால் மட்டுமே வங்கி மூலம் வீட்டுக்கடன் கிடைக்கும். ஆகையால் வீடுவாங்கும் போது உங்களிடம் கொடுக்கப்பட்ட முழு ஆவண விவரங்களையும், சட்டபூர்வமாக ஒரு வழக்கறிஞரிடம் சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அபார்ட்மெண்ட் வீடு வாங்கும் போது யுடிஎஸ் (Undivided Share) 50 சதவீதத்துக்கு மேல் இருந்தால் வரும்காலத்தில் அது அதிக லாபம் கொடுக்கும்.
வங்கியில் வீட்டுக்கடன் பெறுவதற்கு வங்கி பரிவர்த்தனை கணக்கில் கொள்ளப்படும். வங்கி எதிர்பார்க்கும் வகையில் பரிவர்த்தனை இருந்தால், மிக எளிதாக வங்கிக்கடன் உங்களுக்கு கிடைக்கும். ஆகையால்கட்டி முடிக்கப்படாத கடன் ஏதாவது இருந்தால் அதை கட்டி முடித்துவிட்டு வீட்டு கடனுக்கு விண்ணப்பித்தல் நல்லது. ஒருவேளை சில வங்கிகளில் கடன் கட்டாமல் விடுபட்டிருந்தால், வங்கிகள் வீட்டுக்கடன் தராமல் போகலாம் அல்லது தாமதம் ஏற்படலாம்.