க்ராஷ் சோதனையில் மாருதி கார் 
வணிகம்

இந்திய கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்த குளோபல் என்சிஏபி: ஒற்றை ஸ்டார் வாங்கிய மாருதி சுசுகி

செய்திப்பிரிவு

சென்னை: உலகளவில் ஐக்கிய நாடுகளின் மிக முக்கிய மோட்டார் வாகன பாதுகாப்பு தரநிலைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயங்கி வருகிறது குளோபல் NCAP (New Car Assessment Programme). இதன் சார்பில் இந்திய தயாரிப்பு கார்களின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதிக்கும் நோக்கில் அண்மையில் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் மாருதி தயாரிப்புகள் ஒற்றை ஸ்டார் வாங்கியுள்ளது.

பாதுகாப்பான இந்திய கார்கள் என்ற பிரிவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்தான் மாருதி சுசுகி நிறுவன தயாரிப்பான ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. இந்த மூன்று கார்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த நிறுவன கார்களின் பாதுகாப்பு தொடர்பான ரேட்டிங் சங்கடம் தந்துள்ளது.

“இந்திய வாகன சந்தையில் மிகப்பெரிய சந்தை பங்கைக் கொண்டுள்ள உற்பத்தியாளரான மாருதி சுசுகி, மோசமான பாதுகாப்பு தரம் கொண்ட மாடல்களை வழங்குவது கவலைக்குரியது. இந்நிறுவனம் சில முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை கூட இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு வழங்கவில்லை” என குளோபல் NCAP நிர்வாகி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT