புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் 24% அதிகரித்து ரூ.8.77 லட்சம் கோடியாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நடப்பு 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் நேரடி வரியாக ரூ.8.77 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 24.26% அதிகம். நடப்பு நிதியாண்டில் நேரடி வரியாக மொத்தம் ரூ.14.2 லட்சம் கோடி வசூலாகும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 61.79% வசூலாகி உள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.14.1 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனிநபர் வருவாய் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் மீது விதிக்கப்படும் வரி நேரடி வரி என அழைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை, கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு ரூ.2.15லட்சம் கோடி ரீபண்ட் வழங்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 67% அதிகம் ஆகும்.
சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) மாதந்தோறும் ரூ.1.45 லட்சம் கோடி முதல் ரூ.1.5 லட்சம்கோடி வரை வசூலாகி வருகிறது. இது மறைமுக வரி என அழைக்கப்படுகிறது.