புதுடெல்லி: வலுவான கடன் வளர்ச்சி மற்றும் வாராக்கடன் வசூல் நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களால் அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச் சந்தை பக்கம் திரும்பியுள்ளது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக, நடப்பாண்டு நவம்பரில் இந்திய பங்குச் சந்தையில் நிகர அளவில் ரூ.36,238 கோடியை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் அவர்கள் லாப நோக்கம் கருதி இந்திய பங்குச் சந்தையைில் நிகர அளவில் ரூ.4,865 கோடியை விலக்கிக் கொண்டனர்.
நிதி சேவை துறையில் 14 ஆயிரம் கோடி: ஒட்டுமொத்த அளவில் பங்குச் சந்தையில் கடந்த நவம்பரில் அந்நிய நிறுவனங்கள் (எப்பிஐ) நிகர அடிப்படையில் ரூ.36,238 கோடியை முதலீடு செய்தன. இந்த ஒட்டுமொத்த தொகையில், நிதி சேவைகள் துறை ஈர்த்த முதலீடு மட்டும் ரூ.14,205 கோடியாக இருந்தது. இது, ஒட்டுமொத்த முதலீட்டில் 39 சதவீதமாகும்.
இதற்கு அடுத்தபடியாக அதிக அந்நிய முதலீட்டை ஈர்த்ததில் எப்எம்சிஜி துறை உள்ளது. இந்த துறையில் ரூ.3,956 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நுகர்வு நிலையானஅளவில் அதிகரித்து வருவதன் காரணமாகவே அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் இந்த துறையின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த இரண்டு துறைகளைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப துறை ரூ.3,859 கோடி, வாகனத் துறை ரூ.3,051 கோடி மற்றும் எண்ணெய்-எரிவாயு துறை ரூ.2,774 கோடி அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளதாக நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி (என்எஸ்டிஎல்) தெரிவித்துள்ளது.