ஈரோடு: வெளிமாநில வியாபாரிகள் வராததால், ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, திங்கள் இரவு முதல் செவ்வாய் மதியம் வரை வார ஜவுளிச் சந்தை நடக்கிறது. இந்த சந்தையில் மொத்தமாக ஜவுளிக் கொள்முதல் செய்ய மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கேரளாவில் இருந்து மட்டுமே வியாபாரிகள் வந்திருந்ததால், ஜவுளி விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இதர மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால், 20 சதவீதம் மட்டுமே விற்பனை நடந்ததாக தெரிவித்த வியாபாரிகள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இனி வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.