புதுடெல்லி: ஹுருண் இந்தியா, பர்கண்டி பிரைவேட் ஆகியவை இணைந்து இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 500 தனியார் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளது: கரோனா பேரிடர் காலத்தில் சீரம் நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்தது. அந்த கால கட்டத்தில் கரோனா தடுப்பூசியை அந்த நிறுவனம்தான் உருவாக்கியிருந்தது.
இதையடுத்து, பட்டியலிடப்படாத சீரம் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது. இதன் மதிப்பு ஒரே ஆண்டில் 20 சதவீதம் உயர்ந்து ரூ.2.2 லட்சம் கோடியானது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.17.3 லட்சம் கோடி சொத்துகளுடன் முதலிடம் பெற்றது. ரூ.11.7 லட்சம் கோடி மதிப்புடன் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2-வது இடத்திலும், ரூ.8.3 லட்சம் கோடி சொத்துகளுடன் எச்டிஎஃப்சி வங்கி 3-வது இடத்தையும் பிடித்தன.
இந்தப் பட்டியலில், சென்னையைச் சேர்ந்த ஈஐடி-பாரி நிறுவனமும் இடம்பெற்றது. கடந்த 1788-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.11,000 கோடியாக இருந்தது. நிதின் அகர்வால் மற்றும் சுபம் மகேஷ்வரி 2021-ல் உருவாக்கிய குளோபல் பீஸ் ரூ.9,100 கோடி மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ரூ.50,000 கோடி பின்டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சிஆர்இடி அதிக மதிப்பு கொண்ட புதிய நிறுவனமாக ஹுருண் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பர்கண்டி பிரைவேட், ஹுருண் இந்தியா 500 பட்டியலில் 193 நிறுவனங்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகம் 2-வது இடத்திலும், 43 நிறுவனங்களுடன் தமிழகம் 3-வது இடத்திலும் உள்ளன.