பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு வங்கிகளில் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதால், 50 வங்கி கிளைகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருக்கிறது. 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் 50-க்கும் மேற்பட்ட கிளைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் அதிக பரிவர்த்தனை நடந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் ஆக்ஸிஸ் வங்கியின் டெல்லி கிளையில் இரு மேலாளர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் இதே போல நாடு முழுவதும் உள்ள சந்தேகப்படும் 40 கிளைகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு கறுப்பு பணத்தை மாற்றுவதற்கு வங்கி பணியாளர்கள் உதவியதாக வந்த செய்திகளை அடுத்து அமலாக்கத்துறை இதுபோன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது.