வணிகம்

குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18% வரி - 5% ஆக குறைக்க உணவுப்பொருள் வியாபாரிகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரை: குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயபிரகாசம், கவுரவச் செயலாளர் எஸ்.சாய் சுப்பிரமணியம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: 48-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம், டிசம்பர் 17-ம் தேதி ஆன்லைனில் நடைபெறுவதாக தெரிகிறது. கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிறு வணிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதனால், நாங்கள் கொடுத்துள்ள சில கோரிக்கைகளை 48-வது கவுன்சில் கூட்டத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு பொருளுக்கு வரி அல்லது வரி விலக்கு இருக்க வேண்டுமே தவிர பிராண்டுக்கு வரி விதிப்பது தவிர்க்கப்பட வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி அமலாகி இன்று வரை அதன் பல விவரங்களை வணிகர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு விளக்கம் அதிகாரிகளிடம் கேட்டாலும் சரியாக கூறுவதில்லை.

பெட்ரோல், டீசல் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பூஜை பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது அல்லது 5 சதவீதம் வரி உள்ளது. ஆனால், பூஜைக்கு பயன்படுத்தப்படும் சூடத்துக்கு மட்டும் 18 சதவீதம் வரி உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். முந்திரி பருப்புக்கு 5 சதவீதம் வரி உள்ளது. ஆனால், மணலில் வறுத்த நிலக்கடலைக்கு 12 சதவீதம் வரி உள்ளது.

இதனை 5 சதவீத வரியாக குறைக்க வேண்டும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு 12 சதவீதம் வரி உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி உள்ளது. அதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT