புதுடெல்லி: இந்தியாவில் முழுமையான அளவில் 2 மற்றும் 3 சக்கர மின்வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரூ.23 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்று உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் உடன் இணைந்துஉலக பொருளாதார மன்றம் இந்தியாவின் மின்வாகன நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுமையாக 2 மற்றும் 3 சக்கர மின்வாகனங்களுக்கு மாற எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களில் 80 சதவீதம் 2 மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஆகும். 26.4 கோடி இரு சக்கர வாகனங்களும் 60 லட்சம் 3 சக்கர வாகனங்களும் இந்தியாவில் உள்ளன.
இதில், சராசரியாக இரு சக்கர வாகனத்தின் மதிப்பு ரூ.81,000 எனவும், மூன்று சக்கர வாகனத்தின் மதிப்பு ரூ.2.8 லட்சம் எனவும் கணக்கில் கொள்ளும்பட்சத்தில் இந்த 27 கோடி வாகனங்களை முழுமையாக மின்வாகனங்களாக மாற்ற ரூ.23 லட்சம் கோடி (285 பில்லியன் டாலர்) நிதி தேவைப்படும்.
இந்தியாவில் தற்சமயம் 45 நிறுவனங்கள் 2 மற்றும் 3 சக்கர மின்வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மின்வாகனங்களின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், அது தொடர்பாக நீண்டகால அடிப்படையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். தற்சமயம் மின்வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுதவிர்த்து, கொள்கைரீதியாகவும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 26.4 கோடிஇரு சக்கர வாகனங்களும் 60 லட்சம் 3 சக்கர வாகனங்களும் உள்ளன.