மும்பை - தாராவி 
வணிகம்

மும்பை - தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஏலத்தை கைப்பற்றியது அதானி குழுமம்

செய்திப்பிரிவு

மும்பை: உலகின் பரந்த குடிசை பகுதிகளில் ஒன்றான மும்பை - தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஏலத்தை கைப்பற்றி உள்ளது அதானி குழுமம். இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் கேட்டு வென்றுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 5,069 கோடி ரூபாய் ஏலம் கேட்டுள்ளது அதானி குழுமம். இந்த பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 259 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது தாராவி. இந்த பகுதியை மறுசீரமைக்கும் திட்ட பணிகளுக்கான ஏலம் கோரப்பட்டுள்ளது. அதானி மற்றும் டிஎல்எஃப் நிறுவனங்கள் ஏலம் கேட்டுள்ளன. இதில் அதானி குழுமம் வென்றுள்ளதாக திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்விஆர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவரத்தை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும். அதை அரசு நிர்வாகம் பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தாராவி பகுதியில் வசித்து வரும் சுமார் 6.5 லட்சம் குடிசைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ஏழு ஆண்டுகள் கால வரம்பு நிர்ணயம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துவக்கத்தில் தென் கொரியா, அமீரகம் உட்பட சுமார் 8 பேர் இதற்கான ஏலத்தில் பங்கேற்றனர். இறுதி ஏலத்தில் மூன்று பேரை தேர்வு செய்தது மறுசீரமைப்பு திட்டக்குழு. அதில் இப்போது அதானி கைவசம் சென்றுள்ளது. ஆனாலும் இது தொடர்பான இறுதி முடிவை அரசு எடுக்க வேண்டி உள்ளது.

SCROLL FOR NEXT