ட்விட்டர் சமூக வலைதளத்தில் அங்கீகாரம் பெற்ற பயனர் கணக்குகளுக்கு விரைவில் வெவ்வேறு வண்ணங்கள் வழங்கப்படும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நிறுவனங்கள், அரசு மற்றும் தனிநபர்களை எளிதில் அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டண சந்தா வசூலிப்பது. அது ஒரு பக்கம் விவாதத்தை எழுப்பி இருந்தது. இருந்தாலும் தன் முடிவில் மஸ்க் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் அந்த ப்ளூ டிக் நிறம் கணக்குகளின் தன்மையை பொறுத்து மாறுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.
“வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ட்விட்டர் பயனர்களை அங்கீகரிக்கும் பணிகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளது. தாமதத்திற்கு மன்னிக்கவும். நிறுவனங்களுக்கு கோல்டு செக், அரசுக்கு கிரே செக் மற்றும் தனி நபர்களுக்கு ப்ளூ செக் வழங்கப்படும். அனைத்து கணக்குகளும் தனித்தனியே மேனுவலாக சரிபார்க்கப்படும். அதன் பிறகே செக் குறிகள் வழங்கப்படும்” என மஸ்க் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
மஸ்க், சந்தா நடைமுறையை கொண்டு வந்த போது போலியான ட்விட்டர் கணக்குகள் அங்கீகாரம் பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அவர் இந்த புதிய யோசனையை ட்வீட் செய்துள்ளார்.