மும்பை: ஹெச்டிஎப்சி பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் பிஸினஸ் சைக்கிள் என்ற புதிய நிதித் திட்டம் (HDFC Business Cycle Fund) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில் சூழலின் ஏற்ற இறக்கங்களைக் கணித்து அதன் அடிப்படையில் முதலீடு செய்வது இந்தத் திட்டத்தின் அடிப்படையாகும்.
இவ்வாறு தொழில் சுழற்சி அடிப்படையில் முதலீடு செய்வதால் வருவாயும் முதலீட்டின் மதிப்பும் உயரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஹெச்டிஎப்சி பிஸினஸ் சைக்கிள் நிதித் திட்டமானது மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என இரண்டு அணுகுமுறைகளின் கலவையாகச் செயல்படுகிறது. மேலிருந்து கீழ் அணுகுமுறையின்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
கீழிலிருந்து மேல் அணுகுமுறையின்போது நிறுவனத்தின் செயல்திறன், வளர்ச்சி விகிதம், வணிக மாதிரி, நிதி நிலைமை உள்ளிட்டவை கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு இரண்டு அணுகுமுறைகளின் கலவையாக நிறுவனங்களை மதிப்பிட்டு முதலீடு செய்வதால் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
இந்தத் திட்டமானது முதலீட்டுச் செயல்பாட்டை உயிர்ப்பாகவைத்திருக்க உதவும். தொழில்சுழற்சியைப் பொறுத்து முதலீடுகள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும்.
பலதரப்பட்ட துறைகளில், பல வகையான நிறுவனங்களில் முதலீடு செய்ய இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.
மற்ற திட்டங்களைப் பொறுத்தவரையில் சரியான நேரத்தில் முதலீடு செய்தால்தான் பலன் கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தில்அப்படியில்லை. தொழில் நிலவரத்துக்கு ஏற்ப முதலீடுகள் பிரித்துப்போடப்படும். இதனால் இந்தத் திட்டம் ரிஸ்கைக் குறைக்கிறது.தொழில் சூழல் சரிவில் இருக்கும் போது இழப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.