வணிகம்

ஏற்றுமதி வளர்ச்சி நிதியம் உருவாக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி வளர்ச்சி நிதியம் உருவாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன. பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய முதல் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இந்த நிலையில், ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) தெரிவித்துள்ளதாவது: சர்வதேச அளவிலான சாதகமற்ற நிலவரங்களால் அமெரிக்கடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புசரிவைச் சந்தித்துள்ளது. இது,ஏற்றுமதியின் போட்டித் திறனைமிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. எனவே, ஏற்றுமதி துறைஅரசிடமிருந்து நிறைய உதவிகளை எதிர்நோக்கியுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்த செயலாக உள்ளது.இந்த இக்கட்டான சூழலை உணர்ந்து அரசு நிதி சார்ந்த ஆதரவுகளை ஏற்றுமதி துறைக்கு வழங்க வேண்டும். மேலும், குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதியை ஊக்குவிக்க முடியும். அத்துடன் கூடுதல் வேலைவாய்ப்புகளையும் நாட்டில் உருவாக்க முடியும்.

செலவின குறைப்பு நடவடிக்கையாக இந்திய நிறுவனங்கள் சந்தைப்படுத்துதலுக்கான செலவினங்களை கணிசமாக சுருக்கி வருகின்றன.

இது, இந்திய தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் காணாமல் போகச் செய்து நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மத்திய அரசு இதனை உணர்ந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

470 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சந்தை மேம்பாட்டு உதவி (எம்டிஏ) திட்டத்தின் கீழ் ரூ.200 கோடிக்கும் குறைவாக ஒதுக்கும் அரசின் இந்த ஆதரவு கடலில் ஒரு துளி மட்டுமே.

எனவே, தீவிர சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுமதி மேம்பாட்டு நிதியத்தை உருவாக்க வேண்டும் என்பது தற்போதைய அவசிய தேவையாக மாறியுள்ளது. முந்தைய ஏற்றுமதியில் குறைந்தபட்சம் 0.5 சதவீத நிதியை அரசு இதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு எஃப்ஐஇஓ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT