வணிகம்

தினசரி பால் கொள்முதல், விநியோகத்தில் மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு தேசிய அளவில் 3-ம் இடம்

செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், தினசரி பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளது.

மன்னார்குடியில் எஸ்.சாமிநாத கொத்தனார் என்பவரால் 21.1.1939 அன்று 15 உறுப்பினர்களுடன், கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் தொடங்கப்பட்டது. இந்தச் சங்கம் 1995-ல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமாக மாற்றப்பட்டது. மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதியில் 6,130 கறவையாளர்களிடமிருந்து தினசரி 39,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, மன்னார்குடி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 6,500 வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வீடுகளுக்கு வழங்கப்பட்டதுபோக தினசரி 20,000 லிட்டர் ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்தச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 56,546. இவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் 27,696 பேருக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தினசரி பால் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதன் அடிப்படையில், தமிழகத்தில் முதலிடத்தையும், தேசிய அளவில் 3-வது இடத்தையும் மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பெற்றுள்ளது. தேசிய பால் வள வாரிய தென் மண்டல அதிகாரி கிருத்திகா தலைமையிலான குழு, கடந்த வாரம் நேரடி ஆய்வு மேற்கொண்டு அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தச் சிறப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், மன்னார்குடியில் உள்ள இந்தச் சங்க அலுவலகத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.கே.கலியபெருமாள், செயலாளர் வடிவு, சங்கத்தின் மூத்த உறுப்பினர் பிலோமின் ராஜ் ஆகியோர் பால் விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.பெங்களூருவில் நாளை (நவ.26) நடைபெறவுள்ள தேசிய பால் தின விழாவில், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர்(பால் வளம்) விஜயலட்சுமி, கூட்டுறவு சங்க செயலாளர் வடிவு ஆகியோர் பெறவுள்ளனர்.

SCROLL FOR NEXT