கோப்புப்படம் 
வணிகம்

அதீத கட்டுப்பாடுகளால் சீன ஐஃபோன் ஆலையில் வெடித்த வன்முறை: உறுதி செய்த ஃபாக்ஸ்கான்

செய்திப்பிரிவு

பீஜிங்: சீனாவில் இயங்கி வரும் தங்கள் நிறுவனத்தின் ஐபோன் தொழிற்சாலையில் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்ததாக ஃபாக்ஸ்கான் நிறுவன தரப்பில் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளான தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அது போராட்டமாக தொடங்கி வன்முறையாக வெடித்துள்ளது.

உலக அளவில் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாளராக இயங்கி வருகிறது ஃபாக்ஸ்கான். தைவானை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் முழுவதும் (இந்தியாவில் சென்னை உட்பட) தொழிற்சாலைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் மத்திய சீனாவில் இயங்கி வரும் தொழிற்சாலை. இது மிகப்பெரிய தொழிற்சாலை என தகவல். சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றி வருவதாக தெரிகிறது. இங்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் கரோனா தொற்று பரவும் அபாயம் குறித்தும் ஊழியர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்தப் போக்கு கடந்த ஒரு மாத காலமாக அங்கு நீடித்து வருவதாக தெரிகிறது. அங்கு நிலவும் மோசமான சூழல் காரணமாக ஊழியர்கள் சிலர் அங்கிருந்து தப்பியதாகவும் தகவல்.

இந்த நிலையில், தங்கள் மீதான கட்டுப்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்த ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். அது வன்முறையாகவும் வெடித்தது. இது தொடர்பாக வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் முன்னோக்கி நடக்க, வெண்ணிற ஆடை அணிந்துள்ளவர்கள் பின்னோக்கி நடக்கிறார்கள். அந்த வீடியோ உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை (புதன்கிழமை) நடைபெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ‘ஊழியர்கள் ஊதியம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். புதிதாக வேலைக்கு சேர்ந்த ஊழியர்களை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என சொல்லவில்லை. அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இது போன்ற அசம்பாவிதங்கள் இனி நடக்காமல் இருக்க ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பில் நிர்வாகம் பேசும்’ என ஃபாக்ஸ்கான் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT