வணிகம்

இலவச வேஷ்டி, சேலை உற்பத்தியில் ரூ.50 கோடி மிச்சப்படுத்த முடியும்: தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு தகவல்

செய்திப்பிரிவு

கோவை: பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் ரூ.50 கோடியை மிச்சப்படுத்த முடியும் என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சங்கத்தின் அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது: தமிழக அரசின் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தின் உற்பத்தியில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு சரகங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஈரோடு, திருச்செங்கோடு சரகங்கள் 80 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு இலவச வேஷ்டி, சேலை தயாரிப்பு திட்டத்துக்கு ரூ.487 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.1 கோடி சேலை, 1.20 கோடி வேஷ்டி உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்களில் வேஷ்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜவுளிப்பொருட்கள் உற்பத்திக்கு ஆகஸ்ட் மாதம்தான் அரசாணை வெளியிடப்பட்டது. அக்டோபரில் வேஷ்டி தயாரிப்பு பணிகளும், நவம்பர் மாதத்தில் சேலை உற்பத்தி பணிகளும் தொடங்கின. ஜூன் மாதத்தில் பணி ஆணை வழங்கினால் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடித்து மொத்த ஜவுளிப்பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடுவோம். ஆனால் காலதாமதமாக பணி ஆணை வழங்கப்படுவதால் பொருட்கள் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் அனைத்து ஜவுளி உற்பத்தியும் நிறைவடையும்.

தரமான வேஷ்டி, சேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் டெண்டர் விடப்படுகிறது. தமிழக அரசு இந்த பணிக்கான ஆணையை நேரடியாக விசைத்தறியாளர்கள் குழுமத்துக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் ரூ.50 கோடியை மிச்சப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT