ஊதியத்தை கட்டாயமாக மின் னணு முறையிலும் காசோலை முறையிலும் வழங்கும் வகை யில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர முடிவு செய்திருக்கிறது.
ஊதிய வழங்கல் சட்டம், 1936-ல் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர இருக்கிறது. இந்த அவசர சட்டத்திற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை கட்டாயமாக மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலை மூலமும் வழங்க வேண்டும்.
மத்திய அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தால், 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருத்தப்பட்ட சட்ட விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வரும்.
ஊதிய வழங்கல் சட்டம் (திருத்தப்பட்டது) 2016-ல் பிரிவு 6 ஊதியத்தை தொழில்நிறுவனங்கள் காசோலையாகவோ அல்லது மின்னணு பரிவர்த்தனை மூல மாகவோ வழங்க வழிவகை செய் கிறது. இந்த மசோதாவை நாடாளு மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பலத்த கூச்சல்களுக்கு இடையே தாக்கல் செய்தார்.
தொழில்நிறுவனங்கள் பணமில்லா ஊதியம் வழங்கும் முறைக்கு மாற மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்பதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. டிஜிட்டல் மற்றும் குறைத்த பண பொருளாதாரத்தை நோக்கமாக கொண்டு இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படுவதாக மசோதா வில் கூறப்பட்டுள்ளது.
ஊதிய வழங்கல் சட்டம் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி நிறுவனங்கள் ஊதியங்களை நோட்டுகளாகவோ அல்லது நாணயங்களாகவோ வழங்கலாம். 1975-ம் ஆண்டு இந்த சட்டத்தில் இரண்டு விதிகள் சேர்க்கப்பட்டன. அதாவது ஊழியர்கள் கோரிக்கையின் பேரில் ஊதியங்களை காசோலையாகவோ அல்லது வங்கிக் கணக்கு மூலம் வழங்க முடியும்.
ஆந்திர பிரதேசம், உத்தரா கண்ட், பஞ்சாப், கேரளா, ஹரியாணா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே ஊதியத்தை காசோலை மற்றும் மின்னணு முறையில் வழங்குவதற்கு விதிகளைக் கொண்டுவந்துள்ளன.