சான் பிரான்சிஸ்கோ: கடந்த மாதம் இறுதியில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கினார். இதையடுத்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, பொது ஆலோசகர் உட்பட 3,700 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு தடை விதித்தார். தினமும் 12 மணி நேரம் என வாரம் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விருப்பம் இல்லாதவர்கள் 17-ம் தேதிக்குள் ராஜினாமா செய்துகொள்ளலாம் என்று அறிவித்தார்.
இதையடுத்து 17-ம் தேதி 1,200 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, 18-ம் தேதி காலை ட்விட்டர் நிறுவனத்தில் மீதம் இருக்கும் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மின்னஞ்சல் அனுப்பினார். “மென்பொருள் எழுதும் ஊழியர்கள் இன்று மதியம் 2 மணிக்கு 10-வது மாடிக்கு வர வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டார்.
மேலும், மென்பொருள் பொறியாளர்கள் கடந்த 6 மாதங்களில் தாங்கள் செய்த முக்கியப் பணிகளை புல்லட் பாயிண்டாக எடுத்து வர வேண்டும் என்றும் தாங்கள் எழுதிய நிரல்களின் முக்கியமான அம்சங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வர வேண்டும் என்றும் அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டார்.