வணிகம்

10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகும் அமேசான் நிறுவனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த லே ஆஃப் நடவடிக்கையை அமேசான் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் வட்டாரங்கள் தெரிவிப்பதுபோல் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய லே ஆஃப் நடவடிக்கையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அமேசான் மொத்த ஊழியர்களில் இது 1 சதவீதத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.

இந்த லே ஆஃப் குறிப்பாக அமேசானின் அலெக்ஸ் வாய்ஸ் அசிஸ்டென்ட், சில சில்லறை வர்த்தக பிரிவு, மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்த லே ஆஃப் திட்டத்தை பல மாத ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னரே எடுப்பதாகவும் ஏற்கெனவே லாபமற்ற சில துறைகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பொதுவாக விழாக்காலங்கள், விடுமுறைக் காலங்கள் தான் அமேசான் இ காமர்ஸ் நிறுவனத்தின் விற்பனை இலக்கு. ஆனால் இந்த ஆண்டு இந்த காலங்களில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்று கூறப்படுகிறது. காரணம் நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கையில் பணப்புழக்கம் இல்லை. விலைவாசி உயர்வால் பணப்புழக்கம் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லாபம் இல்லாததால் லே ஆஃப் நடவடிக்கையை அமேசான் கையிலெடுத்துள்ளது.

ட்விட்டர், மெட்டா, அமேசான்.. அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள். ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது. தற்போது மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசானும் ஆட் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT