வாஷிங்டன்: சாம் பேங்க்மேன் பிரைடுக்கு வயது 30. அமெரிக்காவைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்பு அவரது சொத்து மதிப்பு 16 பில்லியன் டாலராக (ரூ.1.28 லட்சம் கோடி) இருந்தது. இந்நிலையில் தற்போது அது பூஜ்யமாக சரிந்துள்ளது.
சாம் பேங்க்மேன் 2017-ம் ஆண்டு அலமேதா ரிசர்ச் என்ற டிரேடிங் நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்தார். அதையடுத்து கிரிப்டோ கரன்சி உலகத்தில் தீவிரமாக கால்பதிக்க விரும்பிய அவர் தன் நண்பருடன் இணைந்து ‘எப்டிஎக்ஸ்’ என்ற கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனத்தை 2019-ம் ஆண்டுதொடங்கினார்.
கரோனா காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரித்த நிலையில் இந்நிறுவனம் மிகப் பெரும் லாபம் ஈட்டியது. உலக பில்லியனர்களில் ஒருவராக சாம் பேங்க்மேன் வலம் வந்தார். இப்படி கோடிகளில் புழங்கிய சாம்பேங்க்மேனின் சொத்து மதிப்பு தற்போது பூஜ்ஜியமாக உள்ளது.
எப்டிஎக்ஸ் பெரும் லாபம் ஈட்டத்தொடங்கிய நிலையில், அந்நிறுவனம் எப்டிடி என்ற பெயரில் தங்கள் நிறுவனத்துக்கென்று சொந்த கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்தது. அதில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனால், பலர் அதில் முதலீடு செய்யத் தொடங்கினர். எப்டிடி கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் காய்ன்டெஸ்க் என்ற செய்தி நிறுவனம் எப்டிஎக்ஸ் நிறுவனத்தைப் பற்றி புலனாய்வு செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அலமேதா ரிசர்ச் நிறுவனம் மறைமுகமாக எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் எப்டிடி கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டிவருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி வெளியானதையடுத்து எப்டிஎக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.உடனடியாக அவர்கள் அந்நிறுவனத்திலிருந்து தங்கள் முதலீட்டை திரும்பப் பெறத் தொடங்கினர். இதையெடுத்து எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மளமளவென சரியத் தொடங்கியது. தற்போது அமெரிக்காவில் எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு வெறும் 1 டாலராக உள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சரிவை அடுத்து சாம்பேங்க்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.