சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழாகொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரூ.450 கோடிக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 1921 நவம்பர் 11-ம் தேதி நிறுவப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வதுநிறுவன தின விழா தூத்துக்குடியில் கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது.
வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வங்கியின் அழைப்பு மையத்தை (Call Centre) தொடங்கிவைத்தார். வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன்அவரை வரவேற்று கவுரவித்தார்.நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி செயலர் எஸ்.ஷிபாரா முன்னிலையில், வங்கியின் Manned E-lobby சேவையை நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கடன் முகாமையும் தொடங்கி வைத்தார். கடன் பிரிவு பொது மேலாளர் நாராயணன், துணை பொது மேலாளர் விஜயன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் சிவகுமார், தொழிலதிபர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினர்.
வங்கியின் 12 மண்டலங்களிலும் நடத்தப்பட்ட முகாம்களில் மொத்தம் 1,410 பேருக்கு ரூ.450 கோடிக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன. பொது மேலாளர்கள் சூரியராஜ் (செயல்பாடு, சேவைகள் பிரிவு), இன்பமணி (கடன் மீட்புத் துறை), முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குநர்கள் குழுவினர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் அதிகாரிகள், பங்குதாரர்கள், ஊழியர்கள், வங்கி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.