நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறையை ஜிடிபியில் 4.1 சதவீதமாக குறைப்போம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் தெரிவித்தார். எனக்கு முன்னாள் இருந்த நிதி அமைச்சர் கடினமான இலக்கை நிர்ணயம் செய்துவிட்டார். இது கடினமான இலக்காக இருந்தாலும், அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் நிதிப்பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2015-16ம் நிதி ஆண்டில் 3.6 சதவீதமாகவும், 2016-17ம் நிதி ஆண்டில் 3 சதவீதமாகவும் குறைக்க இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறார்.
2011-12ம் நிதி ஆண்டு நிதிப்பற்றாக்குறை அதிகபட்சமாக 5.7 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு 2012-13ம் நிதி ஆண்டில் 4.8 சதவீதமாகவும், 2013-14ம் நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும் குறைந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதிப்பற்றாக்குறை குறைந்தது. ஆனால் வருமானங்களை அதிகரிக்கச் செய்து பற்றாக்குறையைக் குறைக்காமல், செலவுகளைக் குறைத்து பற்றாக்குறையைக் குறைத்தார்கள் என்று ஜேட்லி பட்ஜெட்டில் தெரிவித்தார்.
நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் சவாலானதாகும். இதற்கு வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும், குறிப்பாக கட்டுமானத்துறை மற்றும் உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து வருகிறது. இதில் கவனம் செலுத்தி வரு கிறோம். வருங்காலத்திலும் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் கவன மாக இருப்போம் என்றார் ஜேட்லி.