புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உலக அளவில் சிறந்து விளங்கக்கூடிய 20 நிறுவனங்களை தேர்வு செய்து போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில், தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட், ஐபிஎம், ஆல்பபெட், ஆப்பிள் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த பட்டியலில் முதல் 12 இடங்களை அமெரிக்க நிறுவனங்களே தக்க வைத்துள்ளன. ஜெர்மனைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ குழுமம் 13-வது இடத்தில் உள்ளது. அமேசான் 14-வது இடத்திலும், பிரான்ஸின் டெக்கத்லான் 15-வது இடத்தில் உள்ளன.
எண்ணெய் முதல் தொலைத் தொடர்பு வரையில் பெரும்பாலான துறைகளில் கோலோச்சி வரும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தப் பட்டியலில் 20-வது இடத்தைப் பெற்றுள்ளது. ரிலையன்ஸில் 2,30,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது, மெர்சிடிஸ் பென்ஸ், கோககோலா, ஹோண்டா, யமஹா, சவூதி அராம்கோ நிறுவனங்களைக் காட்டிலும் அதிகம். போர்ப்ஸ் பட்டியலில் முதல் 100 இடங்களில் ரிலையன்ஸை தவிர வேறு எந்த இந்திய நிறுவனங்களாலும் இடம் பெற முடியவில்லை.
எச்டிஎப்சி வங்கி 137-வது இடத்திலும், பஜாஜ் (173), ஆதித்ய பிர்லா குழுமம் (240), ஹீரோ மோட்டோகார்ப் (333), லார்சன் அண்ட் டூப்ரோ (455), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (499), அதானி எண்டர்பிரைசஸ் (547), இன்போசிஸ் 668-வது இடத்திலும் உள்ளன.