சென்னை: பாங்க் ஆஃப் இந்தியா செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கியின் செயல்பாட்டு வரம்புகளின் காரணமாக நிகர லாபம் 71 சதவீதம் உயர்ந்து ரூ.960 கோடியாக உள்ளது. இருப்பினும், ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது நிகர லாபம் ரூ.1051 கோடியிலிருந்து 8 % குறைந்து ரூ.960 கோடியாக உள்ளது.
அதேபோல செயல்பாட்டு லாபம் 26% உயர்ந்து ரூ.3,374 கோடியாக உள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 55% வளர்ச்சியாகும். மேலும் சொத்து மீதான வருவாய், பங்கு மீதான வருவாய் முறையே 18 மற்றும் 321 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.04 சதவீதத்திலிருந்து 49 அடிப்படை புள்ளிகள் வளர்ச்சி பெற்றுள்ளது. நிகர வட்டி வருவாய் ஆண்டுக்கணக்கில் 44% உயர்ந்து ரூ.5,083 கோடியாக உள்ளது. அட்வான்ஸ் மீதான வருவாய் 7.21% உயர்ந்துள்ளது. நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு வைப்புத் தொகை ஆண்டு அடிப்படையில் 4.05% வளர்ச்சி பெற்றுள்ளது. இது மொத்த வைப்புத் தொகையில் 44.21% ஆகும்.
வாராக் கடன்களை மீட்பதிலும் வங்கி பல படிகள் முன்னேறியுள்ளது. மொத்த வாராக்கடன் 8.51 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் அளவு 1.92 சதவீதமாகவும் இருக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.