வணிகம்

திவால் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் வாராக் கடனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை புழக்கத்துக்கு வரும்

ஐஏஎன்எஸ்

திவால் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தினால் அடுத்த 5 ஆண்டுகளில் வங்கிகள் வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 25,000 கோடி புழக்கத்துக்கு வரும் என தொழில்துறை அமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.

தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசிலுடன் அசோசேம் இணைந்து `திவால் சட்டம் 2016: மாற்றியமைக்கும் சட்டம்’ என்ற தலைப்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு குறித்து அசோசேம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: திவால் சட்டத்தை முறையாக நடைமுறை படுத்தினால் வங்கிகளுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். வாராக் கடனுக்காக ஒதுக்கப் பட்டுள்ள ரூ.25,000 கோடி புழக்கத்துக்கு வரும். இதை மேலும் மற்ற கடன்கள் வழங்குவதற்கு பயன்படுத்த முடியும். இது கடன் தொகையை விரிவுப்படுத்துவதற்கும் உதவி யாக இருக்கும். மேலும் இந்த திவால் சட்டத்தின் மூலம் கடன் வழங்குவதில் சிறந்த ஒழுங்கு முறையை கொண்டு வரமுடியும்.

ஏற்கெனவே கடனை திருப்பி செலுத்த முடிந்து திருப்பி செலுத்தாதவர்களுக்கு விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. மேலும் தற்போது திவால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கடனாளிகளிடமிருந்து எளிதாக கடனை மீட்க முடியும். மேலும் கடன் வழங்குவது, திரும்பப் பெறுவதில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த முடியும். இந்தச் சட்டத்தால் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களின் நிறுவனங்களின் கடன் மீட்பு விகிதம் அதிகரிக்கும். தற்போது இந்த விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது. மேலும் இந்த நிறுவனங்கள் தீர்வு காண்பதற்கும் நீண்ட காலம் ஆகிறது. திவால் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் பொழுது விரைவாக தீர்வு காணமுடியும். அதனால் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் எளிதாக கடனை மீட்க முடியும். மேலும் திவால் சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் பத்திரங்கள் சந்தை மேம்படும்.

வலுவான திவால் சட்டம் கடன் கொடுத்தவர்களின் உரிமைகளுக்கு வலுசேர்க்கிறது. மேலும் வலுவான கடன் பத்திர சந்தைக்கும் முன்னோட்டமாக இருக்கிறது. தற்போது மேற்கொண்டு வரும் சீர்த்திருத்தங்களோடு திவால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தொழில் புரிவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறும். அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கமுடியும். மேலும் உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிடும் சர்வதேச போட்டித்தன்மை குறியீட்டிலும் இந்தியா முன்னேற முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த திவால் சட்டம் தொழில்முனைவை ஊக்கப்படுத்தும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT