மும்பை: மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காலையில் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 60,486 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 17,929 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தின் காலை 09:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 584.90 புள்ளிகள் உயர்வுடன் 60,544.75 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 154.95 புள்ளிகள் உயர்ந்து 17,941.75 ஆக நிலைகொண்டிருந்தது.
உலக அளவில் சந்தையின் நேர்மறையான போக்குகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே இன்று தொடக்கம் பெற்றன. சந்தையின் அனைத்து துறைகளும் நேர்மறையான ஏற்றத்துடன் காணப்பட்டன. நிஃப்டி பார்மா குறியீடுகள் 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து இருந்ததால் இந்திய சந்தைகளும் 1 சதவீதம் வரையில் ஏற்றம் கண்டிருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் எம் அண்ட் எம், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, விப்ரோ, ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. டாடா ஸ்டீல்ஸ் பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தது.