கலிபோர்னியா: கடந்த வியாழக்கிழமை ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கினார். அதன்பின், முதல் நடவடிக்கையாக ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவாலை பணி நீக்கம் செய்தார்.
மேலும், ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.
இந்நிலையில் மேலும் பல ஊழியர்களை பணியிலிருந்து நீக்க அவர் திட்டமிட்டுள்ளார்.பணி நீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்கும்படி துறைத் தலைவர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவிலேயே, பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் ட்விட்டரில் 7,500 பேர் வேலை செய்கின்றனர். ட்விட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களை ஊக்கப்படுத்த அவர்களது பொறுப்புக்கு ஏற்ப நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை வழங்குவதுண்டு. இந்நிலையில், அத்தகைய ஊக்கப் பங்கு வழங்கப்படுவதற்கு முன்பாகவே பலரை பணியிலிருந்து நீக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.