பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

இந்தியாவில் சீன பொருட்களின் இறக்குமதி வரலாறு காணாத உயர்வு | இது சாதகமா?

செய்திப்பிரிவு

பெய்ஜிங்: இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவுக்கான சீன இறக்குமதி முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தி உள்ளன.

இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கான பன்னாட்டு வர்த்தகம் குறித்த விவரங்களை, சீனாவின் சுங்கவரிக்கான பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் இந்திய இறக்குமதி 36.40 சதவீதம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் 3 காலாண்டின் முடிவில் இந்திய இறக்குமதி மதிப்பு 68.46 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், அது இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டின் முடிவில் 89.66 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 13.97 பில்லியன் டாலர் என்ற அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதன்மூலம் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை 75.69 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2021-ல் இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு வர்த்தகம் முதல்முறையாக 100 பில்லியன் டாலரை கடந்தது. கடந்த ஆண்டு அது 125.60 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் இறக்குமதியில் குறிப்பிட்ட பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் மொத்த இறக்குமதி என்பது கடந்த 2021-ல் 97.50 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சீன இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்தாலும், மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் உள்பட பலவற்றை சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இதன் காரணமாகவே, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துக் காணப்படுகிறது. இந்திய மருந்துப் பொருட்கள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அதாவது அவற்றுக்கான தேவை அதிகம் இருப்பதால், சீன இறக்குமதி ஒரு வகையில் நம் நாட்டுக்கு சாதகமானதே என அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகம் அதிகரித்திருப்பதைப் போலவே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடானான சீனாவின் வர்த்தகமும் அதிகரித்திருப்பதாக சீனாவின் சுங்கவரிக்கான பொது நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுடான சீனாவின் வர்த்தகம் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டில் 717 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 13.80 சதவீதம் உயர்வு. இதேபோல், ஐரோப்பிய நாடுகளுடனான சீனாவின் வர்த்தகமும் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டுகளில் 6.90 சதவீதம் உயர்ந்து, 645 பில்லியன் டாலராக உள்ளது.

SCROLL FOR NEXT