வணிகம்

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: பங்குச் சந்தைகளும் சரிந்தன

செய்திப்பிரிவு

நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு சரிந்திருக்கிறது. முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாயின் மதிப்பு 68.84 ஆக சரிந்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் நேற்றைய வர்த்தகத் தின் இடையில் 68.86 ஆக சரிந்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 68.73 ரூபாயில் முடிவடைந்தது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வானது, பண மதிப்பு நீக்கம், அமெரிக்க கடன் பத்திரங்களின் மதிப்பு உயர்வது ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் விளைவு

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரூபாய் வர்த்தகம் 66 முதல் 68.20 என்ற நிலையிலேயே இருந்தது. ஆனால் அமெரிக்க தேர்தலுக்கு பிறகு ரூபாய் மதிப்பு கடுமையாக சரியத் தொடங்கியது. நவம்பர் 8-ம் தேதி 66.60 என்ற நிலையில் இருந்து இப்போது 68.73 என்னும் நிலைமைக்கு சரிந்திருக்கிறது. கடந்த 15 நாட்களில் 3.3 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்திய கடன் சந்தையில் இருந்து 367 கோடி டாலர் மற்றும் பங்குச்சந்தையில் இருந்து 187 கோடி டாலர் நவம்பர் மாதத்தில் மட்டும் வெளியேறி இருக்கிறது.

இந்திய நாணய மதிப்பு மட்டுமல்லாமல் வளரும் நாடுகளின் நாணய மதிப்பும் கடுமையாக சரிந்திருக்கிறது. மெக்ஸியோ பேசோ 11 சதவீதமும், துர்கிஷ் லிரா 7 சதவீதம், கொலம்பியா பெசோ 6.9 சதவீதம் மற்றும் பிரேசில் ரியால் 6.5 சதவீதமும் சரிந்திருக்கிறது.

அமெரிக்காவில் வட்டி உயர்வு

அமெரிக்க மத்திய வங்கி டிசம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற எதிர்ப்பார்ப்பும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு ஒரு காரணமாகும். 10 வருட கடன் பத்திரத்தின் வட்டி விகிதம் 2.35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. முந்தைய மாதத்தை விட 0.58 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இதர நாடுகளின் கடன் பத்திரங்கள் விற்கும் போக்கு இருக்கிறது.

குறுகிய காலத்தில் 70 முதல் 72 ரூபாய் அளவுக்கு சரிவு ஏற்படும் என வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.

8000 புள்ளிகளுக்கு கீழே நிப்டி

ரூபாய் மதிப்பு சரிவை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை களும் நேற்று சரிவை கண்டன. நிப்டி 67.8 புள்ளிகள் சரிந்து 7965 புள்ளியிலும், சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 25860 புள்ளியிலும் முடிவடைந்தன. கடந்த 11 வர்த்தக தினங்களில் நிப்டி 7 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. அதேபோல சென்செக்ஸ் 1780 புள்ளிகள் அளவுக்கு சரிந்திருக்கிறது. மேலும் சரிவு வரக்கூடும் என்றே வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

முக்கிய குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. குறிப்பாக வங்கித்துறை குறியீடு அதிக பட்சமாக 1.45 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து ஆட்டோ, ரியால்டி, ஹெல்த்கேர் ஆகிய துறைகள் அதிகமாக சரிவடைந்தன. மாறாக ஐடி குறியீடு 1.23 சதவீதமும், உலோக பங்குகள் 1.22 சதவீதமும் உயர்ந்து முடிந்தன.

SCROLL FOR NEXT