கோப்புப்படம் 
வணிகம்

பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37,920-க்கு விற்பனை: தங்கம் விலை திடீர் உயர்வுக்கு காரணம் என்ன? - நிபுணர்கள் விளக்கம்

ப.முரளிதரன்

சென்னை: தங்கம் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன, விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்ற பல்வேறு சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் 45 சதவீதம் திருமணத் தேவைக்காகவும், 31 சதவீதம் எவ்வித குறிப்பிட்ட காரணம் இல்லாமலும் தங்கம் வாங்குகின்றனர். ஆண்டுக்கு 900 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் 400 முதல் 500 டன் விற்பனையாகிறது.

இந்நிலையில், திடீரென தங்கம் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரித்து, ரூ.37,920-க்கு விற்பனையானது. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் திடீர் விலை உயர்வுகுறித்து சென்னை தங்கம், வைர நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: உக்ரைன் - ரஷ்யா போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதும், இங்கிலாந்தில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டுள்ளதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதும் தங்கம் விலை உயர்வுக்கான முக்கியக் காரணிகளாகும்.

எனவே, தங்கம் விலை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். தங்கள் இல்லங்களில் திருமணம் போன்ற விசேஷங்களை வைத்துள்ளவர்கள், இப்போதே தங்கம் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

அதேபோல, முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குபவர்களும், தற்போதைய விலையில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதாந்திர முதலீட்டு திட்டத்தின்கீழ், குறிப்பிட்ட தொகைக்கு நகையை வாங்கலாம். தற்போது தங்கம் வாங்குவதால் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

‘‘தங்கத்தை முதலீட்டு நோக்கில் வாங்குவோர், ஆபரணத் தங்கமாக வாங்குவதற்கு பதிலாக கோல்டு இடிஎஃப் திட்டங்கள், தங்கப் பத்திரங்களில் (கோல்டு பாண்டு) முதலீடு செய்யலாம். இதன் மூலம், நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போன்ற நஷ்டங்களை தவிர்ப்பதுடன், நகைகள் திருடு போகுமோஎன்ற அச்சத்தில் இருந்தும் தப்பலாம்’’ என்று நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT