வணிகம்

ரூ.399-க்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு: அஞ்சல் ஊழியர், தபால்காரர் மூலம் சேரலாம்

செய்திப்பிரிவு

தபால்காரர் மூலம் ரூ.399-க்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ப.நாகநாயக் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.399-ல் ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

18 வயது முதல் 65 வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விண்ணப்பப் படிவம் உட்பட எவ்விதக் காகிதப் பயன்பாடின்றி தபால்காரரிடம் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்து 5 நிமிடங்களில் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் சேருவதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT