இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. ஜூன் காலாண்டின் நிகரலாபம் 21.6 சதவீதம் அதிகரித்து 2,886 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இதற்கு முந்தைய மார்ச் காலாண்டை விட 3.5 சதவீதம் நிகரலாபம் குறைந்திருக்கிறது. ஆனாலும் இந்த முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பை விட அதிகமாகவே வெளியாகி இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி 7-9 சதவீதமாக (டாலர் மதிப்பில்) இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரூபாய் மதிப்பில் 5.6 முதல் 7.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வாடிக்கையாளர்களின் நம்பிக் கையை தொடர்ந்து பெற்று வருகிறோம் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.டி.சிபுலால் தெரி வித்தார். வரும் ஜூலை 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் இவர் வெளியிடும் கடைசி காலாண்டு முடிவு இதுவாகும்.
புதிய சிஇஓவாக விஷால் சிகா ஆகஸ்ட் 1ம் தேதி பொறுப்பேற்க இருக்கிறார். புதிதாக பொறுப்பேற்கும் விஷால் சிகா இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வார் என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தற்போதைய சிஇஓ எஸ்.டி. சிபுலால். கடந்த காலாண்டில் புதிய டீல் போடப்பட்டது. இது வருங்காலத்திலும் தொடரும் என்று நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான (சி.ஒ.ஒ) பிரவிண் ராவ் தெரிவித்தார்.
ஆனால் அதேசமயம் வெளியேறுவோர்களின் விகிதம் அதிகரித்து வருவதாகவும், இது கவலை தரும் விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். ஜூன் காலாண்டில் வெளியேறும் விகிதம் 19.5 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய காலாண்டில் வெளியேறும் விகிதம் 18.7 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் பெரிய மென் பொருள் நிறுவனமான டிசிஎஸ்-ல் வெளியேறும் விகிதம் 11.3 சதவீதமாக (மார்ச் காலாண்டு வரை) இருக்கிறது.
கடந்த காலாண்டில் புதிதாக 11,506 பணியாளர்களை நிறுவனம் சேர்த்திருக்கிறது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,61,284 ஆக இருக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் வருமானம் குறைந் திருக்கிறது.
இது குறித்து பேசிய சிபுலால், இந்தியாவுக்கு மூன்று வருடங்களுக்கு முன்புதான் வந்தோம். இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசுடன் பணியாற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளன.
இந்தியாவில் செய்யப்படும் வேலைகளை மாற்றி அமைப்பது குறித்து யோசித்து வருகிறோம் என்றார் சிபுலால்.வர்த்தகத்தின் முடிவில் இன் போசிஸ் பங்கு 1.03 சதவீதம் உயர்ந்து 3,326 ரூபாயாக முடிந்தது.