வணிகம்

வெளிநாட்டு ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள்: இந்திய முகவருக்கு கோடிக் கணக்கில் லஞ்சம்

செய்திப்பிரிவு

வெளிநாட்டு ஆயுத தயாரிப்பு நிறுவன இந்திய முகவருக்கு சுமார் ரூ.730 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிபிசி மற்றும் தி கார்டியன் பத்திரிகைகளுக்கு இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

வெளிநாட்டு ஆயுத முகவரான சுதிர் சவுத்திரியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கு களுக்கு கடந்த 12 மாதங்களில் சுமார் 730 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை ரஷிய நிறுவனம் செலுத்தியுள்ளது. இது தவிர பிரிட்டிஷ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 1 கோடி பவுண்ட் செலுத்தி உள்ளது.

ஆனால் சவுத்திரியின் வழக்கறிஞர் இதனை மறுத்திருக்கிறார். முன்பு டெல்லியில் வசித்த சவுத்திரி இப்போது லண்டனில் வசிக்கிறார். அரசு அதிகாரிகளுக்கு எந்த லஞ்சமும் வழங்கியதில்லை. அதேபோல ஆயுத ஒப்பந்தங்களில் முறையற்ற தரகராகவும் செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

ரகசிய ஆவணங்கள்

ரகசிய ஆவணங்கள் ஆங்கில தி இந்துவின் பார்வைக்கு கிடைத்தன. அதில் 2008-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி சவுத்திரிக்கு தொடர்புடைய பல வங்கி கணக்குகளுக்கு பெரும் தொகை சென்றிருப்பது தெரிகிறது.

கடந்த காலங்களில் மத்திய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத்துறையினரால் பல ஆயுத விவகாரங்களில் இவர் விசாரிக்கப்பட்டிருக்கிறார். பல அரசாங்க ஒப்பந்தங்களில் முறைகேடு செய்தவர் என்று சந் தேகிக்கப்படுபவராகவும் உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு சவுத்திரி மற்றும் அவரது மகன் பானு ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது குற்றசாட்டு ஏதும் இல்லாமல் வெளியே வந்தனர்.

பிபிசி தகவல்கள் படி, பானு சவுத்திரியும், ஒரு ஆயுத தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி பீட்டர் ஜிஞ்சரும் 2007-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து சென்றுள்ளனர். அந்த பயணத்தில் ஜிஞ்சர் பெரும் தொகையை ரகசிய வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் தெரிகிறது. இந்தியா வாங்கிய ஹாக் ரக விமானத்துக்கு ஜிஞ்சரின் பங்கு முக்கியமானது. இந்த விமானங்களில் ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் உள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு 40 கோடி பவுண்ட்கள் ஆகும்.

வழக்கறிஞர் மறுப்பு

ஆனால் பானு சவுத்திரியின் வழக்கறிஞர் இது தொடர்பாக கூறியபோது; ஜிஞ்சர் அல்லது யாருக்கும் அவர் எந்த தொகையும் வழங்கவில்லை, அவருக்கு (பானு) ஜிஞ்சர் அல்லது யாரோ தொடங்கிய வங்கி கணக்கு குறித்து எதுவும் தெரியாது என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஜிஞ்சர் பிபிசியிடம் கூறும்போது நான் எந்த லஞ்சத்தையும் பெறவில்லை, கொடுக்கவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ரகசிய ஆவணங்கள் படி சவுத்திரி குடும்பத்துக்கு சொந்தமான பெலினா சர்வீசஸ் நிறுவனம் 3.92 கோடி யூரோ பெற்றுள்ளது. (அக்டோபர் 2007 முதல் அக்டோபர் 2008 வரை). இதே காலத்தில் காட்டேஜ் கன்சல்டன்ஸ் நிறுவனம் 3.28 கோடி யூரோ பெற்றுள்ளது. கார்டர் கன்சல்டன்ஸ் நிறுவனம் 2.3 கோடி யூரோ பெற்றுள்ளது.

ஸ்விஸ் தனியார் வங்கியான கிளாரிடன் லியூ (Clariden Leu) சவுத்திரி குடும்பத்தினர் வசம் 200 கோடி டாலருக்கு மேல் சொத்து இருக்கும் என கூறியிருக்கிறது.

SCROLL FOR NEXT