பெங்களூரு: வரும் நாட்களில் சுமார் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இறுதியை லாபத்துடன் நிறைவு செய்யும் நோக்கில் தங்கள் ஊழியர்களில் 5 சதவீதம் பேரை நீக்க உள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய யுனிகான் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்களை பணியில் சேர்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ராடக்ட், கன்டென்ட், மீடியா மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து குழுவிலும் பல்வேறு கட்டங்களாக இந்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சொல்லியுள்ளது பைஜூஸ். தற்போது அந்நிறுவனத்தில் சுமார் 50,000 பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் 5 சதவீதம் பேர் தங்களது வேலையை இழக்க உள்ளனர். அதே நேரத்தில் அந்நிறுவனம் கே-10 என்னும் முயற்சியை தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.
“ஒரு வழியாக மிகவும் கடினமான ஆறு மாதங்களை கடந்து விட்டோம். இனி வருங்காலம் நமக்கு வளர்ச்சிதான்” என பைஜூஸ் இணை நிறுவனர் பைஜு ரவீந்திரன் தெரிவித்திருந்தார்.
மார்ச் 2023 வாக்கில் லாபம் பெறுவதை இலக்காக கொண்டுள்ளது பைஜு. “உள்நாட்டு அளவில் பிராண்ட் சார்ந்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெளிநாட்டு சந்தைகளில் இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது நிறுவனம் கொண்டுள்ள பொறுப்பை உணர்ந்து நிலையான வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளோம். இது நிச்சயம் வரும் 2023 மார்ச் வாக்கில் லாபத்தை எட்ட உதவும்” என பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிர்ணல் மோகித் தெரிவித்துள்ளார்.