வணிகம்

6 மாதங்களில் சேவைத் துறையில் அந்நிய முதலீடு 528 கோடி டாலராக உயர்வு

பிடிஐ

தொழில்புரிவதற்கான ஏற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக சேவைத்துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் சேவைத்துறையின் முதலீடு இரண்டரை மடங்கு உயர்ந்து 528 கோடி டாலராக உள்ளது.

குறிப்பாக வங்கி, காப்பீடு, வெளிப்பணி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப சோதனை போன்ற துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த முதலீட்டின் மதிப்பு 146 கோடி டாலராக இருந்தது. தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் புள்ளிவிவரங்கள்படி இது தெரிய வந்துள்ளது. தொழில் புரிவதற்கான ஏற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. முக்கியமாக சேவைத்துறையில் அதிக முதலீடு வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 2016-17-ம் நிதியாண்டின் முதல் பாதியில் எப்டிஐயின் மதிப்பு 30 சதவீதம் அதிகரித்து 2,162 கோடி டாலராக உள்ளது. இந்திய ஜிடிபி மதிப்பில் சேவைத்துறையின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.2015-16 நிதியாண்டில் சேவைத்துறையின் முதலீடு 689 கோடி டாலராக அதிகரித்திருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 444 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஒட்டு மொத்த அந்நிய முதலீடு வருகையில் எப்டிஐ முதலீடு 18 சதவீதமாக உள்ளது.

SCROLL FOR NEXT