போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வுக்கூடம் அமைக்க சோழிங்கநல்லூர் பகுதி யில் ரூ.366 கோடி மதிப்பிலான 28 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதற்கு அந்நிறுவன தலைவர் பில் போர்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக திகழச் செய்ய பல்வேறு நடவடிக்கை களை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் போர்டு குழுமத்தின் தொழில் வளர்ச்சிக் காக பல்வேறு உதவிகளைத் தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் போர்டு நிறுவனம், நாட்டிலேயே முதல் தொழிற் சாலையை ரூ.1,700 கோடி முதலீட்டு டன் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் அமைத்தது. அப்போது தமிழகத்தில் முதல்வ ராக ஜெயலலிதா இருந்தார். தற்போது தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தமிழக அரசு அளித்து வரும் ஆதரவுக்கு முதல் வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்க, போர்டு குழுமத்தின் தலைவர் பில் போர்டு நேற்று தமிழக தலைமைச் செயலகம் வந்தார். அப்போது, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், இந்தாண்டில் போர்டு குழுமத்துக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வுக்கூடம் அமைக்க சோழிங்கநல்லூரில் ஒரு ஏக்கர் ரூ.13.07 கோடி என 28 ஏக்கர் நிலத்தை ( ரூ.365.96 கோடி) ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கும் பணி 2019-ம் ஆண்டு நிறைவு பெறும் என்றும், ஆய்வுக்கூடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்திப்பின் போது, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், செயலர்கள் க.சண்முகம் (நிதி), விக்ரம் கபூர் (தொழில்), ச.கிருஷ்ணன் (திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள்), சிவ்தாஸ் மீனா (முதல்வரின் செயலர் நிலை -2) ஆகியோர் தமிழக அரசு சார்பில் பங்கேற்றனர். போர்டு நிறுவனம் சார்பில் தலைமை செயல் அதிகாரி டேவ் ஷாட்ச் ஆகியோர் பங்கேற்றனர்.