ஐரோப்பிய கூட்டமைப்பில் இல்லாத பிற நாடுகளின் பிரஜைகளுக்கென புதிய விசா முறையை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது. இது இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையினரை வெகுவாக பாதிக்கும் வகையில் அமைந் துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த புதிய விசா கொள்கை யின்படி, நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு விசாவுக்கு விண்ணப்பிக்கும் (டயர் 2 நிறுவனங்களிடை பணி மாற்ற விசா - ஐசிடி) நிறுவன ஊழியர்களின் சம்பள விகிதம் 30 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. இது தற்போது 20,800 பவுண்டுகளாக உள்ளது.
இந்த ஐசிடி முறையிலான விசாவை பெரும்பாலும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங் கள்தான் பயன்படுத்துகின்றன. இதுதொடர்பாக இங்கிலாந்து புலம் பெயர்வு ஆலோசனை குழு (எம்ஏசி) 90 சதவீத விசாக்கள் ஐடி துறையினர் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக இம்மாதம் 6-ம் தேதி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வர உள்ளார். அவர் பயணம் தொடங்கும் முன்பாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரை பாதிக்கும் விசா கொள்கையை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப் படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே புதிய விசா கொள்கை (ஐசிடி) பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தவிர டயர் 2 பொது பிரிவில் அனுபவம் மிக்க பணியாளர்களின் ஊதிய விகிதம் 25 ஆயிரம் பவுண்டு களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பட்டதாரி பயிற்சியாளர் ஊதிய விகிதம் 23 ஆயிரம் பவுண்டுகளாகும். மேலும் ஒரு நிறுவனம் ஓராண்டுக்கு 20 பணியாளர்கள் வரை நிரப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே போல டயர் 4 பிரிவில் பல மாற்றங் களும் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர இரண்டரை ஆண்டு கள் பணி புரிந்து மேலும் இரண் டரை ஆண்டுகள் உள்ள நிலையில் குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக புதிய ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறையின்படி பெற் றோர் மற்றும் மனைவி ஆகி யோருக்கான குடியேற்ற விதிமுறை கள் 2017-ம் ஆண்டு மே 1-ம் தேதி காலாவதியாகும் விண்ணப்ப தாரர்களுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை யைக் குறைப்பதற்காக எம்ஏசி கடந்த ஆண்டு சில பரிந்துரைகளை அளித்தது. இங்கிலாந்தில் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை தொழில் திறமை மிக்கவர்களாக மாற்றும் பணியை எந்த நிறுவனமும் செய்யவில்லை. மாறாக தாங்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களின் பணி களை மட்டுமே செய்வதாக எம்ஏசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள் ளது. பரஸ்பரம் பயன்பெறும் வகை யில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இங்கிலாந்தில் பணிபுரிய அனுமதிக்கும் அதே சமயம், இங்கிலாந்தில் உள்ளவர் களுக்கு பயிற்சி அளித்து அவர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக் கும் பணியை நிறுவனங்கள் செய்வ தில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.