புதுடெல்லி: இந்தியாவின் எண்ணெய் ஏற்றுமதி கொள்கையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில், இந்திய குடிமக்களுக்கு தடையில்லாமல் எரிசக்தி வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தார்மீகக் கடமையும் பொறுப்பும். அதனால் இந்தியா எங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்கிறதோ அங்கிருந்து வாங்கும். இதில் வெளியில் இருந்து யாரும் தடை சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன் என்றார். ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. எண்ணெய் வர்த்தகத்தில் உலக நாடுகளுக்கு இடையே நிலவிய நீண்ட கால உறவுகள் சிதைந்துள்ளன. இதனால் உலகம் முழுவதுமே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்யின் அளவு 50 மடங்கு அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யில் 10% அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியாகிறது. இது உக்ரைன் போருக்கு முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட அளவைவிட 0.2 சதவீதம் அதிகம்.
எண்ணெய் இறக்குமதி குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், "இந்தியா எண்ணெய் இறக்குமதி பிரச்சினைகளை சாமான்ய மக்களிடம் சென்று ஆலோசிக்க முடியாது. அதனால் எங்கு விரும்புகிறதோ அங்கிருந்து வாங்குவோம். எரிசக்தி பாதுகாப்பு, எரிபொருள் வாங்கும் சக்தி ஆகியனவற்றைப் பொருத்து அரசு எங்கிருந்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறோம்" என்றார்.
இந்தியா தற்போது அமெரிக்காவிடமிருந்து 20 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருளை வாங்குகிறது. பசுமை எரிசக்தி பயன்பாடு குறித்தும் தொடர்ந்து அனைத்துவிதமான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம்.